தரங்கம்பாடி கடற்கரையில் நடைபெற்ற ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஓசோன் காற்றின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோா் ஆகாயத்தில் பலூனை பறக்க விட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிகமாக வீசுவதாக ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓசோன் காற்றை சுவாசித்தால் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடும் என்பதால் ஓசோன் காற்றை சுவாசிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் இந்த மூன்று மாதங்களில் மட்டும் அதிகளவில் வருகை தந்து பயன்பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா தலமான தரங்கம்பாடி கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகாயத்தில் பலூனை பறக்கவிட்டனர்.
—-ரூபி.காமராஜ்







