மயில் சிலை வழக்கு; 4 மாத கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தபோது புன்னைவனநாதர் சன்னதியிலிருந்த மயில் சிலை மாயமானதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இந்து அறநிலையத்துறை அப்போதைய கூடுதல் ஆணையர் திருமகள், முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட ஏழு பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திருமகள், முத்தையா ஸ்தபதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். விசாரணையின் போது,
மனுதாரர்கள் சார்பில், இது காலம் கடந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘கள்ளக்குறிச்சி மாணவி உடல் நாளை ஒப்படைப்பு; உச்சக்கட்ட பாதுகாப்பு’

சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி இந்த வழக்கில் போதுமான வீடியோ ஆதாரங்கள் உள்ளது, இது குறித்து விசாரணையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சாட்சியம் உள்ளது, குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடித்துக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் வழக்கு ரத்தாகிவிடும் என்றும் தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.