இரண்டு கை, கால்களை இழந்த இளைஞர் – கோவை அரசு மருத்துவமனை புதிய சாதனை

கோவையில் மின்விபத்தில் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களையும் இழந்த வாலிபருக்கு தமிழகத்தில் முதல்முறையாக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கைகள், கால்கள் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றி…

கோவையில் மின்விபத்தில் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களையும் இழந்த வாலிபருக்கு தமிழகத்தில் முதல்முறையாக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கைகள், கால்கள் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த குமரன் குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சுபாஷ் கடந்த மே-2ம் தேதி நடந்த
மின் விபத்தில் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை
முழங்கைகளுக்கு கீழும் இழந்தார். இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை
இழந்ததால், மற்றவர்களை அனைத்து வேலைக்கும் எதிர்பார்த்து காத்திருக்கும்
நிலையில் இருந்த சுபாஷ் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து உதவி
கோரினார்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவை அரசு மருத்துவமனை
மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் மதிப்பில் எடை குறைந்த இரு செயற்கை கைகள்
மற்றும் இரு செயற்கை கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டது. மேலும் இவருக்கு
மனப்பயிற்சி, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை முடநீக்கியல் மருத்துவ
நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள், உடற்பயிற்சி நிபுணர்களால்
வழங்கப்பட்டது.

இந்நிலையில், உடல் நலம் தேறி செயற்கை கைகள் மற்றும் கால்களுடன்
மாவட்ட ஆட்சியரை சந்தித்த சுபாஷ் செயற்கை கால்கள் உதவியோடு நடந்து காட்டினார். மேலும், மாவட்ட ஆட்சியர் சமீரனின் கைகளை செயற்கை கைகளால் குலுக்கி நன்றி தெரிவித்தார்.

இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்தவருக்கு தமிழ்நாட்டில் இதுவே முதன்முறையாக விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் செயற்கை கைகள், கால்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.