கள்ளக்குறிச்சி மாணவி உடல் நாளை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் வழி முழுவதும் பாதுகாப்பை காவல்துறை பலப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ் குமார் ஆகியோரின் தலைமையில் 4 சரக டிஐஜிக்கள், 6 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்!’
மாணவியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் மாவட்ட எஸ்பி தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பிற்காகச் செல்ல உள்ளனர். இன்று மாலை முதல் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட உள்ளது. மேலும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனங்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் முன்னெச்சரிக்கையாக போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். இதுதவிர, மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாதாரண உடைகளில் காவல்துறை ரோந்து தீவிரப்படுத்தி உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.








