சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் சற்று முன்பு அறிவிக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடகர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. திரைப்படங்களை எடுக்க உகந்த மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்வானது. உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. ஆவணக் குறும்படங்கள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறவில்லை.
தமிழ் மொழியில் சிறந்த திரைப்படமாக வசந்த சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் தேர்வானது. அப்படத்தின் படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதும் இப்படத்தில் நடித்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப அமைப்பு ரீதியிலான வன்முறையை 80களில் தொடங்கி மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் கண் முன் காட்டியது சிவரஞ்சனியின் இன்னும் சில பெண்களும்.
இதேபோல சிறந்த திரைப்படமாக சூரரை போற்று தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளர் விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதும் சூரரை போற்று திரைப்படத்திற்கே வழங்கப்பட்டது.
சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது மண்டேலா திரைப்படத்திற்காக மடோன் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதும் மடோன் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே சிறந்த சண்டைக்கான விருது மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. அப்படத்தில் நடித்த பிஜு மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதும் இத்திரைப்படத்திற்கே இயக்குனர் சச்சிதானந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.







