மாணவர்கள் பேருந்தில் படிகளில் தொங்கி பயணிப்பதால், பள்ளி கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை
ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிப்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சேத்துப்பட்டு போளூர் கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வேலூர் மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
இவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். குறிப்பாக காலை வேளையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணிப்பதால் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாறாக அதிக பயணிகள் செல்லும் பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கி மாணவர்கள் பயணிப்பது காண்போரை கதிகலங்க வைக்கிறது.
மாணவர்களை பேருந்தில் படிகளில் தொங்கி பயணிக்க வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஆபத்தான நிலையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய நிலையில் பயணித்து வருகின்றனர். எனவே பள்ளி கல்லூரி வேலைகளில் ஆரணி மற்றும் கண்ணமங்கலம் மார்க்கமாக வேலூர் வரை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணிப்பதை தடுக்க பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கூடுதல் பேருந்துகளை இயக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.







