முசிறியில் வேனுக்கு கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கிய தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல் துறையிடமும், மாவட்ட கல்வி அலுவலகத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூர் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்
ரவிச்சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி – இவர்களுக்கு சித்தீஷ்வரன் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். மாணவன் சித்தீஷ்வரன் முசிறியில் இயங்கும் அமலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்புப் படித்து வருகிறார். தினசரி பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்படும் வேன் மூலம் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதற்காக நிறுத்தத்தில் வந்து சித்தீஸ்வரன் அவரது தாயுடன் நின்றுள்ளார்.
ஆனால் வேனில் இருந்த உதவியாளர் பரமசிவம் என்பவர் மாணவரை வேனில் பள்ளிக்கு
அழைத்துச் செல்ல முடியாது. 400 ரூபாய் வேன் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது என கூறியுள்ளார். தாய் கலைச்செல்வி நான் 11 மணிக்கு பள்ளிக்கு நேரில் வந்து கட்டி விடுகிறேன் என கூறியும் கேட்காமல் வேனை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதைக்கண்ட கலைச்செல்வியின் உறவினர்கள் பைக்கில் சென்று வேனை நிறுத்தி
டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேன் உதவியாளர் பரமசிவம் மாணவன் சித்தீஸ்வரனை வேனில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.
சற்று நேரத்தில் பள்ளியில் இருந்து மாணவன் சித்தீஸ்வரனின் தாய் கலைச்செல்வியை
பள்ளிக்கு நேரில் வருமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது.
இதையடுத்து பள்ளிக்கு வந்த கலைச்செல்வியிடம் பள்ளி வேனை எதற்காக தடுத்து
நிறுத்தினீர்கள் என கேட்டு மாணவனின் டிசியை கொடுத்துள்ளனர்.
டிசியை வாங்க மறுத்த பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முடிவில் மாணவனின் பெற்றோர் டிசியை பெற்றுக் கொள்வதாகவும்
மாணவனுக்கு இந்த கல்வியாண்டிற்கு கட்டிய ரூபாய் 7500 பணத்தை திரும்பத் தருமாறு
கேட்டுள்ளனர்.
அந்த பணத்தை திரும்பத் தர முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதாக
கூறப்படுகிறது. இதையடுத்து மாணவனின் பெற்றோர்கள் முசிறி போலீஸ் டிஎஸ்பி அருள்மணி, முசிறி மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் எடுக்கப்பட்ட காணொளி காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி
வருவது குறிப்பிடத்தக்கது. புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றுமுசிறி மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை திருச்சி
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் நேரில் சென்று முழுமையாக விசாரணை
செய்வார் என்று தெரிய வருகிறது.








