முக்கியச் செய்திகள் விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய 4வது இந்திய வீரர்!

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து 2 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடியது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமாக திகழ்ந்த அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, அயர்லாந்து தொடரில் இந்திய அணியை தலைமையேற்று வழிநடத்தினார்.
முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சாம்சன் 77 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கம் கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழக்க 3வது வீரராக களம் கண்டார் தீபக் ஹூடா. சாம்சன் ஆட்டமிழக்கும் வரை அயர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார் தீபக் ஹூடா. இந்த ஆட்டத்தில் அவர் 57 பந்துகளில் 104 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்தது.

இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த நான்காவது வீரர் என்ற சாதனையையும் தீபக் ஹூடா படைத்தார். 55 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுதான் அவருக்கு முதல் சதம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்து இருக்கின்றனர். ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4 தடவை சதம் பதிவு செய்துள்ளார். கே.எல்.ராகுல் இருமுறையும், சுரேஷ் ரெய்னா ஒரே ஒரு தடவையும் சதம் பதிவு செய்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் சுரேஷ் ரெய்னா இந்த சதத்தை பதிவு செய்தார். அப்போது அவர் மட்டுமே சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும், பின்னர் கே.எல்.ராகுலும் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் என்ற பெருமையைப் பெற்றனர். அந்த வரிசையில் தீபக் ஹூடாவும் இணைந்துள்ளார். இதுதவிர மற்றொரு சாதனையையும் அயர்லாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தீபக் ஹூடா நிகழ்த்தியுள்ளார்.

சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா பார்ட்னர்ஷிப், இந்த ஆட்டத்தில் 176 ரன்களை சேர்த்தது.
இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக பார்ட்னர்ஷிப்பில் அதிக ஸ்கோர் பதிவு செய்த இணை என்ற சாதனையையும் தீபக் ஹூடா-சஞ்சு சாம்சன் பெற்றனர்.

இதற்கு முன்பு ரோஹித் சர்மா-கே.எல்.ராகுல் இணை, 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 165 ரன்களை பதிவு செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

அந்தச் சாதனையை தீபக் ஹூடா-சஞ்சு சாம்சன் கூட்டணி விஞ்சியுள்ளது.

ஹரியானா மாநிலம், ரோத்தக் நகரில் பிறந்தவர் தீபக் ஹூடா. இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தமாகியிருந்தார்.

முன்னதாக, தீபக் ஹூடாவின் சதம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தீபக் ஹூடா ஆட்டநாயகன் விருதை வென்றார். அவரது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துவோம்!

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்து தற்கொலை

Halley Karthik

சாதனைப்படைத்த சகாவு பினராய் விஜயன்!

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

EZHILARASAN D