முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

“HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை

2010, அக்டோபர் 29ம் தேதி, காலை 8 மணி.

கோவையில் உள்ள ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த, ஜவுளி வியாபாரி ரஞ்சித்குமார் ஜெயின், – சங்கீதா தம்பதியினரின் 10 வயது மகள் முஸ்கான், அவரது தம்பி 7 வயதான ரித்திக் ஆகியோர், எப்போதும் போல் தங்களை அழைத்துச்செல்லும் கால் டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் என்கிற, மோகன கிருஷ்ணனுடன் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும் பிள்ளைகள் இருவரும் வீடு திரும்பவில்லை. பிள்ளைகளை காணாத பெற்றோர் பதற்றத்தில் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்க்கின்றனர். நண்பர்களின் வீடுகளில் விசாரித்தும் எந்தப் பலனும் இல்லை. இறுதியாக கோவை மாநகர காவல் துறையை நாடுகின்றனர் பெற்றொர். ரஞ்சித்குமார் ஜெயின் – சங்கீதா தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் தான், பொள்ளாச்சி அருகேயுள்ள பிஏவி வாய்க்கால் பகுதியில் குழந்தைகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாருக்கும், ரஞ்சித்குமார் ஜெயின் – சங்கீதா தம்பதியினருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், காணாமல் போன குழந்தைகள் முஸ்கானும் அவளுடை தம்பி ரித்திக்கும் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டிருப்பதும், சிறுவன் ரித்திக் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை இப்போது நினைத்து பார்த்தாலும் உடல் நடுங்கி விடும். அந்த வலியை சொல்லி தீர்க்க முடியாது. 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொடுரச் சம்பவம் அப்போது ஏற்படுத்திய தாக்கத்தை சொல்லியா ஆகவேண்டும். சிறு குழந்தைகள் மீதான இந்த வன்கொடுமையையும், கோரப் படுகொலையையும் கண்டித்து தமிழகமே கொந்தளித்தது. மாநிலம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த கொடூர படுகொலை சம்பவத்தின் பின்னனியில் உள்ளவர்களை, காவல் துறையினர் கைது செய்யவேண்டும், அவர்களை பொது இடத்தில் கட்டிவைத்து கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என ஆக்ரோஷமாக தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர் பொதுமக்கள். பெற்றோர் அளித்த புகார் ஒருபக்கம், பொதுமக்களின் போராட்டம் மறுபக்கம், சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதால் ஊடகங்களில் வெளியான செய்தி மறுபக்கம் என பல்வேறு அழுத்தங்கள் காவல்துறைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிற நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு நடுவேதான், கோவை மாநகர காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டு துரிதப்படுத்தியது. சந்தேகத்தின் பேரில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்சென்ற கால் டாக்ஸி ஓட்டுநர் மோகனகிருஷ்ணனையும் அவரது நண்பர் மனோகரனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த இருவரும், விசாரணையின் அடுத்தக்கட்டத்தில் மாணவி முஸ்கானை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் சிறுவன் ரித்விக்கையும் உடல் ரீதியாக துன்புறுத்தி இருவரையும் படுகொலை செய்து வீசிச்சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

இருவருமே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயன்றதாக கூறி இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர். வேனில் சென்று கொண்டிருந்த போது, காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி, வண்டியை நிறுத்துமாறு மோகன்ராஜ் மிரட்டியதாகவும், அப்போது காவல் துறையினருக்கும் மோகன்ராஜக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மோகன்ராஜை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகர காவல்துறையினரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கு இதுபோன்ற தண்டனைதான் வழங்கவேண்டும் என குரல்கள் ஒலித்தன. குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றச்சம்பவங்களுக்கு காவல் துறையினர் மேற்கொள்ளும் தவிர்க்க முடியாத எண்கவுன்டர்கள் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என பேசப்பட்டது. கோவையில் நடந்த என்கவுண்டர், மக்கள் மன்றத்தில் நியாத்தின் தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது. இதன் பின்னணியில் ஒரு காவல் அதிகாரியின் பெயரும் மாநிலம் முழுவதும் உச்சரிக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவும் வெகுவாக பாராட்டிய அந்த காவல் அதிகாரிதான், தமிழ்நாட்டின் டிஜிபியாக பொறுப்பேற்று வெற்றிகரமாக ஓராண்டை நிறைவுச் செய்திருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காவல் துறை கதாபாத்திரங்களான தங்கப்பதக்கம் சிவாஜி, மூன்று முகம் ரஜினி, கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் போன்றுதான், டிஜிபி சைலேந்திர பாபுவும். கற்பனை கதாபாத்திரங்களின் குணாம்சங்களை நிஜத்தில் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல்துறையின் தலைமை அதிகாரி. காவல் துறை உங்களின் நண்பன் எனும் சொல்லுக்கு ஏற்றார்போல, பொது இடங்களிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர் சைலேந்திர பாபு. ஒரு காவல் துறை தலைவராக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் தொடங்கி, பொதுமக்கள் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மோசடி தடுப்பு, குற்றச்சம்பவங்கள் தடுப்பு என அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் டிஜிபி சைலேந்திர பாபு. கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு வழிகாட்டுவது, உடல் ஆரோக்கியம் பேணுவது, சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு ஏற்படுத்துவது என சக மனிதனாகவும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வருபவர் தான் சைலேந்திர பாபு.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் பல பொறுப்புகளில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பணியாற்றி இருந்தாலும், அவரின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும் நாகர்கோவில் தமிழின் வாடையே, அவரின் சொந்த ஊர் கன்னியாகுமரி என்பதை சொல்லாமல் சொல்லிவிடும். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஜூன் 5 ம் தேதி பிறந்த சைலேந்திர பாபுவின் தந்தை இந்திய கப்பல் படையில் பணியாற்றியவர். இதனால், தனது மகனை அரசுப் பள்ளியிலேயே படிக்கவைக்க விரும்பினார் சைலேந்திரபாபுவின் தந்தை. அதன்படி, குழித்துறை அரசு மேனிலைப்பள்ளியில் தான் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார் சைலேந்திரபாபு. பின்னர், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்பில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற சைலேந்திரபாபு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொது சட்டத்தில் இளங்கலையும், மக்கள் தொகை கல்வியில் முதுகலையும் முடித்தார். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கல்வியில் முனைவர் பட்டம் பெற்ற சைலேந்திர பாபு, காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு திருவனந்தபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் அதிகாரியாகவும் பணியாற்றினார். இதன்பிறகு 1987ம் ஆண்டு ஐபிஎஸ் என்றழைக்கப்படும் இந்திய காவல் பணிக்கு தேர்வாகி, ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகாடமியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சியை நிறைவுச் செய்தார்.

காவல்துறையில் 1989ல் சைலேந்திர பாபுவுக்கு கோபிசெட்டிபாளைய காவல் உதவி கண்காணிப்பாளராக முதல் பணி வழங்கப்பட்டது. ஆரம்பமே அதிரடிதான் என்பதுபோல, அப்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தனமர கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட குழுவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார் சைலேந்திரபாபு. இந்நிலையில் 1991ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தையொட்டிய 12 மலை கிராமங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என வீரப்பன் மிரட்டல் விடுத்திருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் ஏடிஎஸ்பியாக இருந்த சைலேந்திரபாபு குழுவினருக்கும் வீரப்பன் தரப்பினருக்கும் நேரடியான மோதல் சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக ஈரோடு மாவட்டம் கடம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேரடியாக நடந்த துப்பாக்கி சூட்டில் வீரப்பன் கூட்டாளிகள் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் போலீஸார் தரப்பில் மூவருக்கு கடுமையான குண்டுக் காயங்கள் ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது ஈரோடு மலைகிராமங்கள் பகுதியில் பேருந்து போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளில் தடைகள் ஏற்படுத்தி இருந்தனர் வீரப்பன் தரப்பினர். அங்கெல்லாம் தடைகளை தகர்த்து அரசு பேருந்துகளை ஓட்டிச் சென்ற சைலேந்திரபாபுவின் செயலைக் கண்டு அதிர்ந்தனர் வீரப்பன் தரப்பினர்.

எதற்கும் அஞ்சாத சைலேந்திர பாபுவின் வீரத்தை சோதித்து பார்க்கும் வகையில் 1992ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே துப்பாக்கிச்சூடு ஒன்று நடைபெற்றது. நக்சலைட் குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் குழுவைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய சைலேந்திர பாபு, சிறப்பான பணிக்காரணமாக திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். குறிப்பாக, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் இருந்த போது, 1997ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பேருந்து ஒன்று பயணிகளுடன் கண்மாயில் மூழ்க தொடங்கியது. சக காவலர்களுடன் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சைலேந்திர பாபு, இதனை கண்டதும், கண்மாயில் மூழ்கி கொண்டிருந்த பேருந்தில் இருந்தவர்களை உடனடியாக காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து அதில் இருந்த 16 பேரை உயிருடன் மீட்டது சைலேந்திர பாபுவின் படை. இந்த விபத்தில் சிலர் உயிரிழந்தாலும், பலர் காப்பாற்றப்பட்டது மக்களை கவர்ந்தது. சைலேந்திரபாபுவின் வீரதீர செயலை பாராட்டி 2001ம் ஆண்டு வீரதீர செயலுக்கான பிரதமர் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பிறகுதான், திருச்சி டிஐஜி ஆகவும், கரூர் மாவட்ட தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றிவந்த சைலேந்திர பாபு வீரப்பனை பிடிக்கும் தமிழ்நாடு அதிரடி படையில் மீண்டும் இணைக்கப்பட்டார்.

தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அதிரடி போலீஸ்காரராக அறியப்பட்ட சைலேந்திர பாபு, 2000ம் ஆண்டு மீண்டும் சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணிக்கு அனுப்பப்பட்டார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் சொந்த ஊரான நெருப்பூர் பஞ்சாயத்து அலுவலகக் கட்டடத்தில் இரவு பகலாக தங்கியிருந்து வீரப்பனை பிடிக்க திட்டமிட்டனர் சைலேந்திர பாபு உள்ளிட்ட குழுவினர். இந்நிலையில், தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் இருக்கும் செம்மந்தி மலைப்பகுதியில் வீரப்பன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்த 2001ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் அப்பகுதிக்கு விரைந்தது ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு தலைமையிலான குழு. அங்கே இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச்சூடு. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள முடியாமல் வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்களிடமிருந்த பொருட்களைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

வீரப்பன் உயிரோடு இருந்த காலகட்டத்தில் காவல்துறையில் அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்கள் ஐந்து பேர். அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.பி. ஹரிகிருஷ்ணா, டி.எஃப்.ஓ சீனிவாசஸ், எஸ்.ஐ.ஷகீல், எஸ்.ஐ தினேஷ் மற்றும் சைலேந்திரபாபு. இதில் சைலேந்திரபாபுவை தவிர மற்ற நான்கு அதிகாரிகளும் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். ஆனால் சைலேந்திரபாபுவை மட்டும் இறுதிவரை வீரப்பன் தரப்பினரால் நெருங்க முடியவில்லை. வீரப்பன் மறைவுக்கு பிறகு, 2004ம் ஆண்டு சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார் சைலேந்திர பாபு. அப்போது தலைநகர் சென்னையில் தலைவிரித்தாடிய கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் மற்றும் மாமூல் வசூலிப்பதில் கொடி கட்டிப் பறந்த காட்டான் சுப்பிரமணி, கேட் ராஜேந்திரன், பூங்காவனம் ராமமூர்த்தி, மாட்டு சேகர், டைசன் சேகர், பாக்சர் வடிவேல், வீரமணி போன் தாதா ரவுடிகளின் கதைக்கு முடிவு கட்டினார் ஆக்ஷன் கிங் சைலேந்திர பாபு.

தற்போது, சென்னையில் ரவுடிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றால், அதற்கு சைலேந்திரபாபுவின் ஆரம்பகால துணிச்சலான நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்கின்றனர் காவல்துறையிர். இதுபோன்ற பரபரப்பான பணிச்சூழலுக்கு மத்தியிலும், 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய முதுநிலை மெய்வல்லுநர் போட்டியில், அதாவது Asian Masters Athletic Championships போட்டியின் 100 நூறு மீட்டார் ஓட்டப்பந்தய பிரிவில் கலந்துக் கொண்டார் சைலேந்திர பாபு. சென்னை, கோவையில் நடைபெற்ற பத்தாயிரம் மீட்டர் மராத்தான் போட்டிகளிலும் பங்கெடுத்திருக்கிறார். வடசென்னையில் 4 ஆண்டுகள் இணை ஆணையராக இருந்து முத்திரை பதித்த சைலேந்திர பாபு, 2010ம் ஆண்டு கோவை மாநகர ஆணையராக பதவி உயர்பெற்று மாற்றலானார். அப்போது, மாநில முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்கு எந்தவகையிலும் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளித்தது முதலமைச்சரின் பாராட்டை பெற்றது. இதன் பின்னர்தான் கோவை சிறுமி முஸ்கான் பாலியல் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும், சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜநார் என்கவுன்டர் செய்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் இதுபோன்ற என்கவுன்ட்டர் சம்பவங்களுக்கு அடிப்படையாக கோவையில் 12 ஆண்டுகளுக்கு முன்பே, கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சைலேந்திர பாபு நடத்திய என்கவுன்டர் அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கியது. என்கவுன்டர் சம்பவத்தில் இருவேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், மக்கள் மேடையில் சைலேந்திர பாவு ஹீரோவாகவே கொண்டாடப்பட்டார். இதன் பிறகு சென்னை வடக்கு மண்டல ஐஜியாக சிறப்பாக பணியாற்றியவருக்கு, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் ஏடிஜிபியாக பதவி உயர்வு தேடி வந்தது. அங்கும் அவரது பணி பாராட்டுதலைப் பெற்றது.

சைலேந்திர பாபு தமிழக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் ஏடிஜிபியாக இருந்த காலத்தில்தான் ஆயிரத்து 71 கிலோ மீட்டர் நீளமுடைய 13 தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்து அரணாக காத்து நின்றார். அப்போது, கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கும் என மத்திய உளவுத் துறையினர் எச்சரித்திருந்தனர். இது பற்றி யோசித்த சைலேந்திரபாபு, தனக்குக் கீழ் பணியாற்றும் கடலோர காவல் படை போலீஸாருடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் மீனவ இளைஞர்களை இணைத்து குழுக்களை அமைத்தார். ஐந்தாயிரம் பேர் கொண்ட இளைஞர்களைத் தேர்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்தார். மீன்பிடி வாழ்வை மட்டும் நம்பி இருந்த மீனவ இளைஞர்களுக்கு சைலேந்திர பாபு கொண்டுவந்த ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி பயிற்சி, அவர்களின் வாழ்க்கை பாதையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களை கொண்டு தமிழக கடலோரங்களில் உள்ள 30 கடலோர காவல் நிலையங்களை திறந்துவைத்தார் சைலேந்திரபாபு.

2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது கடல் போல் காட்சி அளித்த தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், வேளச்சேரி, ஈஞ்சம்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழுவினருடன் களத்தில் இறங்கினார் சைலேந்திர பாபு. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பலரை காப்பாற்றியது பாராட்டை பெற்றது. அவர் தலைமையில் நடைபெற்ற கடலோர பாதுகாப்பு மீட்பு ஒத்திகை நடவடிக்கைகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும் இந்திய கடல் வழி மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்கள் நடுக்கடலில் மூழ்கி உயிரிழக்கும் சோக சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதை தடுக்கும் வகையில், கள்ளத்தோணி ஆசாமிகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறைத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட சைலேந்திரபாபு, அதற்கு முன்பு இருந்த சிறைத்துறை தலைவர்களில் இருந்து முற்றிலும் தனித்து விளங்கினார். சிறைக்கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். கைதிகளுக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம், வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டம் ஆகியவற்றுடன், தண்டனை முடிந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர் கொண்டு வந்த திட்டங்கள் கைதிகள் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தின.

ரயில்வே காவல் டிஜிபியாக பணியாற்றியபோது, துறை சார்ந்த சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு வகித்தார். ரயிலில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஆண்டுக்கு 500க்கும் குறைவான முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதியப்பட்டு வந்த நிலையில், ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளை அழைத்து, புகார்கள் வந்தால் உடனடியாக எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு, வருடத்துக்கு 3 ஆயிரம் தகவல் அறிக்கைகள் பதிவாகின. இதேபோல் ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நன்னடத்தை கொண்ட கைதிகள் 700க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபியாக பணியாற்றிய போது, தீயணைப்பு காவல்துறைக்கு புத்தெழுச்சியை கொண்டுவந்தார்.

காவல் துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ள சைலேந்திரபாபு, பணிக்காலத்தில் செய்த அரிய சாதனைகளுக்காக மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார். காவல் துறையில் ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையூட்டும் எழுத்தளராகவும் அறியப்படுகிறார் சைலேந்திர பாபு. தன்னைபோல் ஐபிஎஸ் ஆக விருப்பப்படும் மாணவர்களுக்காக நீங்களும் ஓர் I.P.S. அதிகாரி ஆகலாம், உடலினை உறுதிசெய், அமெரிக்காவில் 24 நாட்கள்” என சைலேந்திர பாபு எழுதியுள்ள புத்தகங்கள் இளம் மாணவர்களின் தலைமைப் பன்பை வளர்க்கும் புத்தகமாக உள்ளன. பதவி எதுவாக இருந்தாலும் போலீஸ் என்ற பொறுப்பு எப்போதும் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் சைலேந்திர பாபு, கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் 30வது சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டார். டிஜிபியாக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ரவுடிகளை ஒடுக்குவது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். பந்தோபஸ்தில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்டு செயல்படுத்த செய்தார். கந்துவட்டி மரணங்களை தடுக்க, ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்குவோரின் விவரங்களை வியாபாரிகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா விற்பனையை ஒழிக்கும் வகையில், ஆப்ரேஷன் கஞ்சா திட்டத்தையும் முடுக்கிவிட்டுள்ளார். காவல்நிலைய மரணங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு மேல் விசாரணைக் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டார். ராமேஸ்வரம் அருகே வடமாநிலத்தவர்களால் மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டிருக்கிறார். டிஜிபியாக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே காவலர்களுக்கு கட்டாய விடுப்பு, ரவுடிகள் மற்றும் கூலி படையினரை ஒழிக்க ஆப்ரேஷன் டிஸ்ஆர்ம் திட்டத்தை செயல்படுத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை இரண்டே நாளில் கைது செய்தார். சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடும் நபர்களை கைது செய்வது, பேருந்துகளில் ஆபத்தான நிலையில் பயனிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுப்பது என சட்டம் ஒழுங்கில் தனிக்கவனம் எடுத்து செயல்படுகிறார் டிஜிபி சைலேந்திரபாபு. இதுபோன்ற அதிரடியான உத்தரவுக்கு மத்தியிலும் காவல்துறையின் நண்பனாகவே வலம் வருகிறார் இந்த ஹீரோ காப் டிஜிபி சைலேந்திர பாபு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எழுவர் விடுதலை; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Arivazhagan Chinnasamy

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Web Editor

ரயிலில் தொங்கி கொண்டு பயணம்; 364 வழக்குகள் பதிவு

G SaravanaKumar