பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் தெளிப்பதற்காக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனையடுத்து கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கோபுரங்களுக்கும் கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து நேற்று காலை மங்கல இசையுடன் 2-ம் கால யாகபூஜை தொடங்கி, பூர்ணாகுதி, கணபதி பூஜை, கலசபூஜை ஆகிய பூஜைகளும் நடைபெற்றது. இதன் பின்னர் சிவாச்சாரியார்கள், பக்தர்களால் திருப்புகழ், திருமுறை பாடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு மலர்தூவ முடிவுசெய்யப்பட்டு, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து இன்று வரவழைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரானது, பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான அருள் பழனி ஆண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது திருக்கோவில் தங்க விமானம் மற்றும் ராஜ கோபுரத்தை சுற்றிலும் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது தெரிந்து உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் ஹெலிகாப்டரை காண குவிந்தனர். இதனையடுத்து ஹெலிகாப்டரை பொதுமக்கள் நெருங்காத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா