அரவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையக நடந்து முடிந்துள்ளது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 மாடுகளை பிடித்து முன்னணியில் இருந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் காளை முட்டியதில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அரவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சார்பாக ரூ.2 இலட்சம் ரொக்கபணம் என மொத்தம் ரூ. 5 இலட்சம் நிவாரண நிதியை அமைச்சர் மூர்த்தி அரவிந்தராஜின் தாயாரிடம் வழங்கினார்.
மேலும் அரவிந்தராஜின் தாயார் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு தன்னுடைய மூத்த
மகனுக்கு ( நரேந்திரன்) அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.







