ஓபிஎஸ்-டிடிவி தினகரனின் சந்திப்பு நகைச்சுவையானது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாமில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :
”தமிழ்நாடு முழுவதும் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நமது மாவட்டத்திலும் நடைபெறுகிறது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் சந்திப்பு என்பது மிகவும் நகைச்சுவையானது தான்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் என்றும், ஊர் ஊராக சென்று சசிகலா தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்றும், அதனை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறியதும் ஓபிஎஸ் தான். விசாரணை கமிஷனில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆஜராகும் படி சம்மன் வந்தது. அதற்கெல்லாம் ஆஜராகாமல், கடைசியில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமே இல்லை என்றார். அதோடு சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாகவும் கூறினார்.
துரோகத்தின் உச்சக்கட்ட உருவம் ஓபிஎஸ். இவர்கள் இருவர் சந்தித்தது அதிமுகவில், எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எந்த கால கட்டத்திலும் அதிமுகவுடன் சேர்ப்பதாக இல்லை. அவர்கள் பாஜக மூலம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பாஜக அப்படி செய்ய மாட்டார்கள். அதுபோன்ற நிர்பந்தத்தை பாஜக ஒருபோதும் எங்கள் மீது வைக்காது. இவர்கள் மூவருக்கும் எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை. அதிமுக கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன.
கடல் கடந்து எப்படி முதலீடு செய்வது என்பதை பற்றி தான் சபரீசனும் ஓபிஎஸ்-ம் பேசி இருப்பார்கள். அதோடு திருச்சியில் திமுகவிற்கு ஆதரவாக மாநாடு நடத்தி விட்டேன் என்று அதற்கு நன்றி சொல்வதாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஓபிஎஸ் ஸ்டாலினுடன் நெருங்கிப் பழகுவதாக சசிகலாவே குற்றம் சாட்டியிருந்தார். ஓபிஎஸ்-க்கு இப்பொழுது சசிகலா என்று சொல்ல வாய் வரவில்லை. சின்னம்மா என்று தான் சொல்ல வருகிறது.
ஓபிஎஸ் – டிடிவி தினகரன் ஆகிய இருவரும் சேர்ந்தால் மொத்த தமிழ்நாடும் இருட்டாகிவிடும். ஓபிஎஸ் எங்களிடம் இருந்து கொண்டே டிடிவி தினகரனிடம் பேசி உள்ளார். இதை தினகரன் ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றி. அதிமுகவின் கதவுகள் அடைக்கப்பட்டதால் டிடிவி தினகரனை சந்திப்பது தான் ஒரே வழி என்று அங்கு சென்றுள்ளார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்களுக்கு எதிரி இல்லை. அவர்களும் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் எங்கள் கட்சிக்கு வருவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்”.
இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.