முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் வகையில், திமுக அரசு புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட அனுமதி அளித்திருக்கும் கொடுஞ்செயலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதியளித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படும் நிலையில், அதனைத் தடுக்கத் திறனற்ற திமுக அரசு, புதிய குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது தமிழ்நாட்டில் மணற்கொள்ளை மேலும் பலமடங்கு அதிகரிக்கவே வழிவகுக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆறுகள் பாறைகள் மீது உராய்ந்து, உராய்ந்து சேகரித்து வந்த துகள்கள் சேர்ந்து ஓர் அடி உயரத்திற்கு மணல் வளர பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது. மணல்தான் வளமான நிலத்திற்கு அடிப்படை ஆதாரமாகிறது. ஆறுகளின் ரத்த நாளங்களாக உள்ள மணலை அள்ளி விற்பதென்பது தாயின் மார்பினை அறுத்து ரத்தம் குடிப்பதற்கு ஒப்பானது.

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிகாலத்தில் கட்டுக்கடங்காமல் நடைபெற்றுள்ள மணற்கொள்ளையால் ஆறுகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வேளாண்மை செய்ய முடியாத மிகமோசமான சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அனுமதியளித்துள்ள குவாரிகளில், அனுமதித்த அளவை விட நாள்தோறும் பல்லாயிரம் டன்கள் மணல் கொள்ளையடிக்கப்பட்டே வருகிறது. ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆறு மீட்டர் ஆழத்திற்குச் சுரங்கம் போல ஆறுகள் சூறையாடப்படுகின்றன. அதனைத் தடுத்து முறைப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, புதிய குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் கொடுஞ்செயலாகும். அதுமட்டுமின்றி, வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படவும், பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கவும் வழிவகுக்கும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) ஒப்புதல் பெற்ற பிறகே புதிய மணல் குவாரிகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது திறக்க முடிவு செய்துள்ள 25 புதிய மணல் குவாரிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுவிட்டதா? தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்கள் எல்லாம் மணல் அள்ள தடை விதித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மணல் அள்ள தொடர்ந்து அனுமதிக்கப்படுவது ஏன்? சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் மணற்கொள்ளையைத் தடுக்காமல் புதிய குவாரிகள் திறக்க அனுமதிப்பது ஏன்? மலேசியா உள்ளிட்ட நாடுகள் மணலை விற்கத் தயாராக உள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்யத் தடை விதித்து கடந்த அக்டோபர் மாதம் திமுக அரசு அரசாணை பிறப்பித்தது ஏன்?

எனவே, தமிழ்நாட்டில் மணல் பற்றாக்குறை உள்ள காரணத்தாலேயே புதிய மணற் குவாரிகள் திறக்க முடிவு செய்துள்ளோம் என்று திமுக அரசு கூறுவது உண்மைக்குப் புறம்பானது. தற்போதைய மணல் தட்டுப்பாடு, மணல் இறக்குமதிக்குத் தடைவிதித்து திமுக அரசால் செயற்கையாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மணல் விற்பனையில் கிடைக்கும் தரகு தொகைக்காகவும், ஆளும் கட்சியினர் நடத்தும் மணற்கொள்ளைக்கு ஆதரவாகவுமே தற்போது புதிய குவாரிகளுக்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் தேவைக்காகக் குறைந்த அளவுகளில் மணல் அள்ளிக்கொள்வது என்பது நியாயமானதே. அதனை அரசு உறுதிப்படுத்தி, முறைப்படுத்த வேண்டும். ஆனால், தனியார் தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கெனப் பெருவணிக நோக்கத்திற்காகவும், அண்டை மாநிலங்களுக்குக் கடத்துவதற்காகவும் தமிழ்நாட்டு இயற்கைவளமான ஆற்றுமணலை அள்ளி விற்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆகவே, திமுக அரசு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் வகையில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட அனுமதி அளித்திருக்கும் முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக கேட்டுக்கொண்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இதுவரை இல்லாத அளவு; 11,000த்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு!

Jeba Arul Robinson

அரசுப் பள்ளி மாணவர்களை ஆடிட்டராக்கும் திட்டம் தொடக்கம்!

Web Editor

தொடக்கமே அரசர் சார்லஸுக்கு சவாலாக அமைகிறதா?

Web Editor