ஏன் வெளிநடப்பு செய்கிறோம் என தெரியாமலே?… அதிமுகவினரை விமர்சித்த ஓபிஎஸ்!

ஜெயலலிதா பெயர் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுகிறது என்பது கூட தெரியாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8…

ஜெயலலிதா பெயர் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுகிறது என்பது கூட தெரியாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13-ஆம் தேதி திருப்பி அனுப்பினார்.  இதில், பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே,  சில மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,  இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக,  தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்பட்டது.  இந்த கூட்டத்தில்,  10 மசோதாக்காளை நிறைவேற்றுவதான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர்,  10 மசோதாக்களை காரணம் எதையும் குறிப்பிடாமல்,  அனுமதி அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.  அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன்கீழ், மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் போது,  அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்  என்று பேசினார்.

இந்நிலையில், முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசினார். அப்போது, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார்.  ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை.  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,  தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ’ஜெயலலிதா’  பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில்,  10 மசோதாக்காளும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதனை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.  அதோடு ஜெயலலிதா பெயர் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுகிறது என்பது கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெளிநடப்பு செய்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் எப்போதும் பரஸ்பரம் இருக்க வேண்டும் முன்னுக்கு பின் முரணாக இருக்க கூடாது என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.