தமிழ்நாட்டில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்
சென்னை திருவல்லிக்கேணியில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் நிலை துவக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்கள் பயிலும் வகுப்பறையை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி திறந்து வைத்தனர். அதன் பின்னர் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். உறுதிமொழியை அடுத்து மாணவர்களுக்கு தன்னார்வலர் ஆசிரியை மூலம் வகுப்புகள் துவங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தில் தொடங்கிய இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மொத்தம் 4 லட்சத்து 93 ஆயிரம் தன்னார்வலர்கள், மாணவர்களுக்கு வகுப்பெடுக்க பதிவு செய்துள்ளார்கள் எனவும், இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரபபிரசாதம் எனவும் தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக, 80 ஆயிரம் மையங்கள் மட்டுமே கைவசம் உள்ளதாகவும் மேலும் 1 லட்சத்து 70 ஆயிரம் மையங்கள் தேவைப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொது தேர்வு பற்றி கூறுகையில், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும் என்று அவர் தகவலளித்தார்.







