புதுச்சேரியில் திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவிகித மக்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அனைவரும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தீவிரப்படுத்த வேண்டும், மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மக்கள் கூடும் இடங்களில் கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவிகித மக்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அதேபோல, ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 7-ஆம் தேதிக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









