எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 93 எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்திருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? அணி மாற்றத்திற்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில்…

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 93 எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்திருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? அணி மாற்றத்திற்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் பாஜகவிற்கு மாறியுள்ளனர்? பின்னணி என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

மணிப்பூரில் கட்சி மாறிய ஐந்து எம்எல்ஏக்கள்

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து திடீரென விலகிய முதலமைச்சர் நிதிஷ்குமார், லாலு உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடர்ந்து வருகிறார். இதை அடுத்து பாஜகவுக்கும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களில் ஆறு பேரில் 5 பேர் திடீரென பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியுள்ளனர். இது நிதீஷ் குமாரின் கட்சிக்கு பின்னடைவாகவும், பாஜகவின் பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது. இப்போது மட்டுமல்ல ஒரு கட்சியின் எம்எல்ஏக்கள் வேறு ஒரு கட்சிக்கு மாறுவதும், சேர்வதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இவ்வாறு கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 93 எம்எல்ஏக்கள் மாறி இருப்பது தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.

அண்மைச் செய்தி : குஜராத் போதைப் பொருட்களின் மையமாக மாறியுள்ளது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

அருணாச்சலத்தில் ‘அட்சரம்’ போட்ட பாஜக:

வடகிழக்கு மாநிலங்களில் 1984ல் ஒன்று என்று கணக்கைத் தொடங்கிய பாஜக இப்போது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. பாஜகவின் ஆட்சிக் கணக்கு அருணாச்சல பிரதேசத்தில் 2003ல் தொடங்கியது. தேர்தலையை எதிர்கொள்ளாமல், அங்கு ஆட்சியில் இருந்து காங்கிரசின் ஆட்சியைக் கவிழ்த்து, பாஜக தனது ஆட்சியை அமைத்தது. ஆனால் கெகாங் அபாங் தலைமையிலான பாஜக ஆட்சி அப்போது, 42 நாட்களில் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும் வரை, 2014 வரை, அதன் முயற்சிகள் பலனைத் தரவில்லை. ஆனால் 2014க்கு பிபிறகு அதன் முயற்சி, தோல்வியைத் தழுவவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. 

வடகிழக்கு மாநிலங்களைக் கைப்பற்றிய பாஜக

அசாம், அருணாச்சலபிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநில சட்டமன்றங்களில் மொத்தம் உள்ள 498 சட்டமன்ற உறுப்பினர்களில் 378 பேர் பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலம் என்பது பாஜகவின் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. அங்கு பாஜக மேற்கொண்ட அரசியல் முயற்சிகள், பதராகவே மாறின. ஆனால் சற்றும் மனம் தளராத பாஜக 2003ல் இருந்து இன்று வரை தனது வளர்ச்சியை, ஆட்சியை அங்கு கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பலனாக, வடகிழக்கு மாநிலங்களில், 2003ல் 3 ஆக இருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது 200ஐ தாண்டிவிட்டது. பாஜக வடகிழக்கு மாநிலங்களில் அபரிமித வளர்ச்சியைக் கண்டு, அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சியை நிலைநிறுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. மிசோரமில் மட்டுமே வேறு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அதிலும் கூட காங்கிரஸ் பங்களிப்பு இல்லை.

அசாமில் “அசத்திய” பாஜக

அசாம் மாநிலம், 2016ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிய பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவை வளைத்துப் போட்டது. அவரது பிரச்சாரம் அந்த கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. மத்திய அமைச்சர் பதவியைத் தொடர்ந்து, தற்போது அசாம் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் ஹிமந்தா. தொடர்ச்சியாக அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் அடுக்கடுக்கான வெற்றிகளைக் குவித்தது பாஜக.

2014 க்கு பிறகு அமோக வளர்ச்சி கண்ட பாஜக

எந்த ஒரு கட்சியும், தங்களுடைய கட்சி மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே செயல்படும். அதனை யாராலும் தவறு என்று சொல்ல முடியாது. அதே நடைமுறையில் பாரதிய ஜனதா கட்சி தனது கட்சியையும் ஆட்சி பரப்பையும் விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.‌ நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு வடகிழக்கு மாநிலங்களில் பாஜக விஸ்வரூப வளர்ச்சியை எட்டியது.

வெற்றிக்காக என்னவெல்லாம் செய்யலாம் என்று பாஜக யோசித்துக் கொண்டே இருக்கிறது. அத்தகைய சிந்தனையின் விளைவு இந்த வடகிழக்கு மாநிலங்களில் தனது கட்சியின் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பல மாநிலங்களில் தேர்தலையே சந்திக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றன. மணிப்பூரில் தங்கள் கட்சி எம்எம்எல்களை பாஜக வளைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இது நியாயமா? அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாக என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதிகாரத்திற்காக அணி மாறிய மகாராஷ்டிரா கட்சிகள்:

மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த போது பாஜக சிவசேனா ஒரு அணியாகவும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் தேர்தலில் களம் கண்டன. இதில் பாஜக சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றாலும் சிவசேனாவுக்கு அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை. என்றாலும் பாஜகவை விட 50 எம் எல் ஏக்கள் குறைவாக இருந்த சிவசேனா, பழைய வழக்கப்படியே முதலமைச்சர் பதவியை கோரியது. அதனால் எழுந்த சிக்கலால் அந்தக் கூட்டணி முறிந்தது.

பின்னர் பரம எதிரியாக இருந்த காங்கிரஸ். தேசியவாத காங்கிரஸ் உடன் கைகோர்த்து சிவசேனா ஆட்சி அமைத்தது. இதிலும் அதிகார ஆசையே முதன்மையாக இருந்தது. இந்தக் கூட்டணி தனது ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்து விடும் என்று எண்ணிய நேரத்தில் தான் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷின்டேவின் அதிகாரம் மற்றும் பதவி ஆசை, அந்த கூட்டணி ஆட்சியை சீர்குலைத்தது. சிவசேனாவில் இருந்து பெரும்பான்மை எம்எல்ஏக்களை பிரித்து பாஜகவுடன் இணைத்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றவும் அதிகார ஆசையே அடிப்படையாக இருந்தது. ஒரே மாநிலத்தில் நிகழ்ந்த இரண்டு அணி மாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் பணம் மற்றும் அதிகார ஆசையே அடிப்படை என்றால் மிகையல்ல.

கட்சி தாவல் தடை சட்டம்

கடந்த 8 ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களில் மட்டும், 93 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் அணி மாறி இருக்கிறார்கள். அதில் 3ல் ஒரு பங்கு முன்னாள் காங்கிரஸ்காரர்கள். ஒரு கட்சியில் வென்றுவிட்டு, பின்னர் பதவிக்காகவும், பணத்துக்காகவும் அணி மாறுவதைத் தடுக்கவே கட்சித் ததாவல் தடைச் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியில் இணைந்தால் மட்டுமே அவர்கள் பதவி தப்பிக்கும். இல்லை என்றால் அவர்கள் தகுதி நீக்கத்திற்கு ஆளாவார்கள். இப்படி கடுமையான சட்டங்கள் இருந்தாலும், காற்றுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் நாணல்கள் போலவே சில சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே படம்பிடித்து காட்டுகின்றன.

அணி மாற்றத்தின் பின்னணியில் இருப்பது….

அணி மாற்றத்தின் பின்னணியில் அடிப்படையாக இருப்பது அதிகார ஆசையும் பணத்தாசையும் தான் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். அத்துடன் அந்த அந்த எம்எல்ஏக்கள் குவித்துள்ள வரைமுறை அற்ற சொத்துக்களும் , அதற் காரணமாக அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகள் பாய்ந்துவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள். இதைத்தான் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு எம்எல்ஏக்களுக்கு 20 கோடி வீதம் கை மாறுவதாகவும் கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறு பல ஆயிரம் கோடி கைமாற்றத்துடன் பன்னூறு எம்எல்ஏக்கள் கட்சி மாறி இருப்பதாகவும் பட்டியலிட்டு குற்றம் சாட்டி இருக்கிறார்.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்…

பாட்டுக் கோட்டை கட்டி வாழ்ந்த “மக்கள் கவிஞர்” பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் “திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வைர வரிகளுக்கு ஏற்ப, பதவி மற்றும் ஆதாயத்திற்காக அங்குமிங்கும் ஓடும் இந்த கட்சிமாறிகள் திருந்தாதவரை ஆட்சி / காட்சி / கட்சி மாற்றத்தையும் திருத்தவே முடியாது; நிறுத்தவே முடியாது.

-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.