பாஜக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சிலர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 16வது குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு காலையில் தொடங்கி…

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சிலர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

16வது குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 4,033 எம்.எல்.ஏக்கள் மற்றும் 776 எம்.பிக்கள் என மொத்தம் 4,809 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். குடியரசு தலைவர் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்முவுக்கு, எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கூட்டணிகளிலும் அங்கம் வகிக்காத பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர்  திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளார். பரபாதி கட்டாக் தொகுதி எம்.எல்.ஏவான முகம்மது மொகியூம், குடியரசு தலைவர் தேர்தலில் தாம் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மனசாட்சிபடி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய முகம்மது மொகியூம், ஒடிசா மண்ணின் மகளான திரௌபதி முர்மு நாட்டின் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்கிற விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஒடிசா சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் நரசிங்க மிஸ்ரா, முகம்மது மொகியூம் குறித்து கட்சி தலைமையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

இதற்கிடையே குஜராத் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ காந்தல் எஸ். ஜடேஜாவும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.