நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறிய பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி மாநிலத்தை சீரழிக்கும் நோக்கில் பிரான்ஸ் நாடு நிதி உதவி வழங்கியுள்ள குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, மீறி செயல்படுத்தினால் நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து…

புதுச்சேரி மாநிலத்தை சீரழிக்கும் நோக்கில் பிரான்ஸ் நாடு நிதி உதவி வழங்கியுள்ள குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, மீறி செயல்படுத்தினால் நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்எல்ஏ ஜான்குமார் பேசுகையில், புதுச்சேரி நகரப் பகுதிகளில் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலந்ததால் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் துவர்ப்பாக இருக்கிறது. இதனால் புதுச்சேரி நகரப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சரி செய்யும் வகையில் பிரான்ஸ் நாட்டு அரசு 534 கோடி கொண்ட குடிநீர்த் திட்டத்திற்கு புதுச்சேரி அரசுக்கு நிதி வழங்கி உள்ளது. அதன்படி, புதுச்சேரியின் கிராமப் பகுதிகளில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 600 அடி ஆழத்தில் போர் அமைத்து அங்கிருந்து குடிநீர் எடுத்து பைப் லைன் மூலம் நகரப் பகுதியில் வினியோகிக்க வழிவகை செய்கிறது இத்திட்டம். மேலும், இத்திட்டம் இவ்வாண்டுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இந்த போர் மூலம் குடிநீர் எடுத்தால் எதிர்கால சந்ததியினருக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அரசு இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தை சீரழிக்கும் நோக்கில் பிரான்ஸ் நாடு இந்த குடிநீர்த் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. அவர்கள் வழங்கும் நிதியை போர்வெல் மூலம் நீர் எடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

இத்திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட்டுவிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரி அங்கு மழை நீரைச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, முதலமைச்சர் தனது வேண்டுகோளை ஏற்று பிரான்ஸ் நாட்டின் நிதி உதவி பெற்று செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும்.

இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றால் பொது மக்களை திரட்டி முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும். தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும், நீதிமன்றமும் தன்னை கைவிட்டால் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தெரிவித்துள்ளார். 

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.