சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது, “தைரியம் தான் நாம் அனைத்திற்கும் அடிப்படை. நம்மை தாழ்த்தும்போது உத்வேகம் வரும். அது மட்டுமல்ல, மற்றவர்கள் நம்மை ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில், நம்மைக் குறைவாக எடைபோடும் நேரத்தில் தான் உத்வேகம் பிறக்கும். நாம் யார் என்று காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும்.எந்த விஷயத்தில் நம்மை கிண்டலும் கேலியுமாகப் பேசினார்களோ அந்த விஷயத்தில் நம்மை நேர்மறையாக மாற்றுவதற்கு உத்வேகம் வரும்.
அங்கிருந்துதான் அந்த சக்தி உருவாகிறது. தமிழ்நாட்டோட முதல் படை வீரனா. தமிழ்நாட்டோட முதல் பாதுகாவலனா மக்களுடன் நிற்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். என்னை சீண்டிப் பார்த்தவர்களுக்கு ஒன்று கூறுகிறேன். என் தாய் நாடான தமிழ்நாடு தான் எனது வீடு. விஜய் பனையூரை விட்டு வெளியே வா என அழைப்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா? என் வீடான தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் என் சொந்தம், தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான்.
மக்களை சந்திக்க மற்றவர்களுக்கு அனுமதி தரும்போது விஜய்க்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்தாயிரம் பணத்தை வாங்கிக் கொண்டுகாதில் விசில் ஊதி அனுப்புங்கள். இளம் தலைமுயினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் மாற வேண்டும். பணம் கொடுத்தால் நீங்கள் ஓட்டு போட்டு விடுவீர்களா? நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது; எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குதான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்’. இனி நீங்கள் கொள்ளையடித்த பணம் எல்லாம் குப்பையில்தான் போட வேண்டும். மக்களும் ஊழல் ஆட்சியை குப்பையில் போட போகிறார்கள். இளம் தலைமுறையினர் தங்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்கள். நாங்கள் எந்த கட்சியை ஒழிக்கவோ அழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை.
எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ இல்லை, வெறுப்பு அரசியல் செய்ய நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியல்ரீதியாக எங்களுக்கு எதிரி யார் என்று அறிவித்து மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம். அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கேட்கிறார்களே? அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தாண்டி வேறு எதுவும் அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா?
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் இவர்களுக்கு எல்லாம் ஒரு சவால். இவர்களால் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க தைரியம் இருக்கிறதா?
எங்களுக்கு அனுபவம் இல்லைதான், கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லைதான் என்று கூறினார்.








