ரயில்வே குரூப் டி தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளை எழுத தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
அதோடு தேர்வு நடைபெறும் இடத்திற்கு 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டிய சூழல் உள்ளதால் இது சாத்தியமல்ல என கூறியுள்ளார்.
700.கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது என்பது கடுமையான மன உளைச்சலையும், தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும். மேலும் மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும் எனவே இது கூடாது.
மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.







