செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
”அமைச்சரை நீக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்விக்கு பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளார். தற்போது அவர் முதலமைச்சர் ஆன பிறகு இதை எதிர்க்கிறார். முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார். செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பது முதலமைச்சருக்கு தெரியும். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் படி ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுனர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ஆனால் கடிதத்தை படித்துவிட்டு என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன். தமிழ்நாடு அமைச்சரவையில் 99% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே ஆளுநர் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு.
இது தனி மனித தாக்குதல் அல்ல. முதலமைச்சர் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது. ஒரு மனிதனுக்காக அரசாங்கத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளார். கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரைக் செய்துள்ளனர். கரூரில் கட்சிவாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. வருகின்ற ஜீலை 28ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கவுள்ளேன். இந்த நடைபயணத்தை அமித்சா தொடங்கி வைக்கவுள்ளார்.”
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.







