தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார்.
திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழத் தொடங்கியது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுபவத்திற்கு தகுந்த பதவி கிடைக்காமல் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த இறையன்புவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் தேர்வாக இருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தமிழ் வழியில் பயின்றவர், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய இறையன்பு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது அனைவர் மத்தியிலும் வரவேற்கத்தக்க நிகழ்வாக அமைந்தது. கடந்த இரு ஆண்டுகளாக தலைமைச் செயலாளாராக பணியாற்றிய இறையன்புவிற்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால், இன்றுடன் ஓய்வு பெற்றார்.
இதையும் படியுங்கள் : மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி – பாதிக்கப்பட்டவர்களின் நிலையை விவரித்து வேதனை!!
இதனிடையே நேற்று தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக, நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை நியமித்து, தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார். ஓய்வுபெறும் இறையன்புவிடம் பேனா வாங்கி கையெழுத்திட்டு சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து இறையன்பு வாழ்த்து தெரிவித்தார்.







