சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி ”நிகரென கொள்-2023” என்ற விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுத்துள்ளது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விசிக மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கீதா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல், கடந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்தில், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். மேலும், நடப்பாண்டில் மகளிர் தினத்தையொட்டி மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக, வன்கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி இயக்கம் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த விழிப்புணர்வு இயக்கம் மூலம் 7 லட்சம் கையெழுத்துகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நிகரென கொள் 2023-க்கான லோகோவை நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல், சிறப்பு விருந்தினர்கள் எம்பி ரவிக்குமார், எழுத்தாளர் கீதா இளங்கோவன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்
இதையடுத்து வன்கொடுமைகளில் இருந்து பெண்களை காப்பது தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. எம்பி ரவிக்குமார் உறுதிமொழியை வாசிக்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, எம்பி ரவிக்குமார், ழுத்தாளர் கீதா இளங்கோவன் ஆகியோர், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய எம்பி ரவிக்குமார், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்த நியூஸ் 7 தமிழை வெகுவாக பாராட்டினார். கேரளாவிலும் மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நடைபெறவிருக்கும சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெண் பணியாளர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தார். நியூஸ் 7 தமிழின் இந்த முன்னெடுப்பு, வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நிகழ்வு என்றும் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கீதா இளங்கோவன், மாதவிடாய் காலங்களில் பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், பெண்களுக்காக சுகாதாரமான முறையில் கழிப்பறைகள் கொண்டு வருவதற்காகவும், நியூஸ் 7 தமிழ் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். கழிப்பறை வசதி இல்லாததால் இன்றும் கிராமப்புறங்களில் பெண்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அவர் கோடிட்டு காட்டினார்.
“நிகரென கொள் 2023” விழிப்புணர்வு இயக்க தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை, பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
விசிக எம்பி ரவிக்குமாரிடம் “நிகரென கொள் 2023″ உறுதிமொழி இயக்கத்திற்கான உறுதி மொழி படிவத்தை நியூஸ் 7 தமிழின் மூத்த பொறுப்பாசிரியர் சரவணன் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட எம்பி ரவிக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதாகவும், இந்த இயக்கத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.







