புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

நவம்பர் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென் மாவட்டங்களில்…

நவம்பர் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (நவம்பர் 27)  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இதையும் படியுங்கள்: கேரளா: பல்கலைகழக இசை நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி

மேலும் இன்று (நவம்பர் 26) முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதனிடையே நாளை (நவம்பர் 27) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் நவம்பர் 28-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்,  ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.  இந்த நிலையில் நவம்பர் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.