மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழந்தன. இதனால் நடந்து முடிந்த நீட் தேவை தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார். அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் – நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!
தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







