விழுப்புரம் அருகே வளவனூரில், வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர், கே.எம்.ஆர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த
ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராசன், உமாதேவி தம்பதி தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகன் ராஜராஜசோழன் பெங்களூரிலும், மகள் பத்மா புதுச்சேரியிலும் திருமணமாகி வசித்து வருகின்றனர்.
ராசன், உமாதேவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு பால்காரர் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் வசிக்கும் மகள் பத்மா பெற்றோரை தொலைபேசியில்
தொடர்புக் கொண்டுள்ளார். இருவரின் தொலைபேசியும் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த பத்மா அதே பகுதியில் இவர்களுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் விஜயராணி என்பவரை தொடர்புக்கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விஜயராணி, அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது ராசன், உமாதேவி இருவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர், சம்பவ இடத்தில் தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவுயுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியாவுல்ஹக் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்மமாக இறந்து கிடந்த இருவரின் வாய் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததால் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டனரா அல்லது சொத்திற்காக கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







