பெண்களை வணங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி தன்னை வணங்கச் செய்கிறார். வரும் தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது என மகளிர் உரிமை மாநாட்டில் பீகார் அமைச்சர் லெஷி சிங் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கலந்து கொண்டனர்.
மேலும் இம்மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பீகார் அமைச்சர் லெஷி சிங் பேசுகையில், “பெண்களின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு எதுவுமே செய்யவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பெண்களை வணங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி தன்னை வணங்கச் செய்கிறார். வரும் தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது. “ இவ்வாறு அவர் தெரிவித்தார்.







