எம்எல்ஏ பதவி ராஜினாமா? – மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் விளக்கம்!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பதவியை ராஜினாமா செய்ய ப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடைபெற்றது.…

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பதவியை ராஜினாமா செய்ய ப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுரை தெற்கு சட்டமன்ற மதிமுக உறுப்பினர் பூமிநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தனது தொகுதியில் மாநகராட்சி பணிகள் முறையாக நடைபெறவில்லை எனவும், பாதாள சாக்கடை, சாலை வசதிகள் குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் எடுத்து கூறியும் பணிகள் பாதியிலே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரிடமும், வைகோவிடமும் சொல்லிவிட்டு பதவியே வேண்டாம் என்ற அளவில் மனநிலை உள்ளதாகவும் பூமிநாதன் தெரிவித்தார்.

இதனால் கூட்டணி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் இருப்பதாக வேதனையை வெளிப்படுத்திய நிகழ்வு மாமன்ற கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை தெற்கு தொகுதியில் சாக்கடை, குடிநீர் பிரச்னைகள் தொடர்ச்சியாக தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்றத்தில், மாமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன். அந்த பணிகளில் நிலவும் சுணக்கம் காரணமாகவே வருத்தம் தெரிவித்தேன். ராஜினாமா செய்ய மாட்டேன். அது எனக்கு நோக்கமல்ல. எம்.எல்.ஏ.வாக நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.