பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித் தெருவில் ரோஜா ஜுவல்லரி என்ற
பெயரில் நகைக்கடை நடத்தி வந்தவர் ராஜசேகர் (60). இவர் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி பட்டுக்கோட்டை பொறுப்பாளராக இருந்து
வந்தார். இந்நிலையில், திருச்சி மாநகர் கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு நகைகளை வாங்கி வந்ததாக கூறி
ராஜசேகர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பின்னா், தன்னையும் தன் மனைவியையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என வேதனையுடன் தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, மன உளைச்சலுடன் இருந்த ராஜசேகர் பட்டுக்கோட்டை அருகே உள்ள செட்டியக்காடு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், ராஜ சேகர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ரூபி.காமராஜ்







