3 மாநிலங்களைச் சேர்ந்த 4 பேருக்கு புது வாழ்வு தந்த நபர்! ஓர் உருக்கமான நிகழ்வு!

ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்ட பல உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று வெவ்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு ஆபத்தான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்ட சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.…

ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்ட பல உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று வெவ்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு ஆபத்தான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்ட சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த 43 வயது நபரான பிரசென்ஜித் மொஹந்தி கடந்த ஜூன் 22 அன்று அவரது வீட்டில் வழுக்கி விழுந்ததனால் அவர் படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது மூளை
செயலிழந்த விவரம் மருத்துவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தினரின் சம்மதத்தோடு, 20 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு மூளை இறந்த நோயாளியான பிரசென்ஜித் மொஹந்தியின் இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு நுரையீரல் மற்றும் கல்லீரல் உட்பட பல உறுப்புகளை, உறுப்பு தானம் செய்வதற்காக எடுத்தனர்.

பின்னர் எடுக்கப்பட்ட உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று வெவ்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து SUMUM தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்வேதபத்மா தாஷ் பேசும்போது “அரசு நிறுவனங்கள் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பு நிகழ்வு நடந்ததனால், உறுப்புகளை புதுடெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடிந்தது. மேலும் மருத்துவமனையில் இருந்து உடல் உறுப்புகளை சர்வதேச விமான நிலையத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்ல புவனேஸ்வரில் ஒரு பசுமை வழித்தடத்தை போலீசார் உருவாக்கினர், அங்கிருந்து அவை வெளி மருத்துவ குழுக்களுடன் இரு நகரங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சனிக்கிழமை இரவு SUMUM இல் காத்திருந்த நோயாளிக்கு மாற்றப்பட்டது, மற்றொன்று வேறொரு நோயாளிக்கு மாற்றுவதற்காக கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே போல் பாராகுவாட் விஷத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனின் உடல்நிலையை மேம்படுத்த, இரண்டு நுரையீரலும் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தவிர கல்லீரல் டெல்லியில் உள்ள மற்றொரு தனியார் சுகாதார
நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பபட்டு அங்கு வேறொரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மிக விரைவில் இந்த செயல்கள் பலரின் ஒத்துழைப்போடு நடந்ததால் தான் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த நான்கு பேருக்கு தற்போது புது வாழ்வு கிடைத்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.