மிக்ஜாம் புயல் பாதிப்பு: 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கொரட்டூர் பகுதி மக்கள்!

மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் தொடர்ந்து 3 நாட்களாக சென்னை கொரட்டூர் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.  வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…

மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் தொடர்ந்து 3 நாட்களாக சென்னை கொரட்டூர் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். 

வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.

மேலும் இப்புயலானது தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பாபட்லா பகுதியில் தீவிர புயலாக நேற்று மாலை கரையை கடந்தது.  புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடந்ததாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.  இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.  மேலும்,  மரங்கள்,  மின் கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மிக்ஜாம் புயலானது சென்னையை விட்டு கடந்து சென்றாலும் அதன் பாதிப்புகளிலிருந்து பல பகுதிகள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.  மிக்ஜாம் புயலின் எதிரொலியாக சென்னை கொரட்டூர் பகுதியைச் சார்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முதியவர் முதல் சிறியவர் வரை தவித்து வருகின்றனர்.

மழைநீரோடு  கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கொரட்டூர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு,  வடக்கு,  மத்திய,  கிழக்கு நிழற்சாலைகள் பேருந்து செல்லும் சாலைகள் அதிகளவில் மழை நீர் தேங்கி உள்ளது. . பக்தவத்சலம் பள்ளி,  விவேகானந்தா பள்ளி ஆகியவற்றை சுற்றியுள்ள தெருக்களில் மழை நீர் 2 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.