இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறி கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஸ்தபிசூர் ரகுமானை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பிசிசிஐ உத்தரவின் பேரில் முஸ்தபிசூரை கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது. கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் நிர்வாகம் எடுத்திருந்தது.
கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தபிசூர் ரகுமான் நீக்கப்பட்டதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வங்கதேச அணி வராது என்றும் தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே பொதுவான மைதானத்தில் நடத்துமாறும் ஐசிசிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த சூழலில், ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொல்கத்தா அணியிடம் 2026 ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிசூர் ரகுமானை விடுவிக்குமாறு கூறியுள்ள பிசிசிஐ அதற்கு எந்த விதமான “தர்க்கரீதியான காரணத்தையும்” தெரிவிக்கவில்லை. பிசிசிஐ -யின் அத்தகைய முடிவு வங்காளதேச மக்களை வருத்தப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வங்க தேசத்தில், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அனைத்து போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவு முறையான அதிகாரியின் ஒப்புதலுடனும் பொது நலனுக்காகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது”என்று கூறப்பட்டுள்ளது.







