மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் விஜய் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் மீது விவாதம் நடைபெறு வருகிறது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியான மேகதாது அணையை கட்டுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது.

2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமருக்கு அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாது அணை கட்ட கர்நாடகம் நிதி ஒதுக்கியவுடன் கண்டனம் தெரிவித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும். வருகின்ற காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் நமது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்து நீரை பெற்றுக் கொடுக்க வேண்டும். தனித் தீர்மானத்தில், மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதே போல தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த பேசுகையில், “சுதந்திரம் பெற்றது முதல் காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, மீனவர் பிரச்னை என பேசிக்கொண்டே இருக்கிறோம். நமது உரிமைகளை தொடர்ந்து அண்டை மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டு வருகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்வர் சிவக்குமாருடன் மேகதாது விவகாரம் குறித்து பேச வேண்டும். மின்மிகை நீர் மேலாண்மையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். மாநில நதிகளை முதலில் இணைப்போம். மழைநீர் கடலில் கலப்பதை தவிர்த்தாலே மின்மிகை நீர் மேலாண்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.