தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி ஒரு மாதமாகியும், காவல்துறை முதல் சிபிசிஐடி வரை எந்தத் துப்பும் துலக்க முடியாமல் திணறி வருகிறது. பெற்றோர் கண்ணீரில் கதறி வரும் நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையைக் கூடப் பாதுகாக்கத் திறனற்ற அரசாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே செஞ்சி ஜெயங்கொண்டானில் கடைக்குச் சென்று திரும்பிய மற்றொரு 7 வயது சிறுமியை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கடத்த முயன்றுள்ளனர். அச்சிறுமி சாதுரியமாக அலறியதால் பொதுமக்கள் ஓடிவந்து காப்பாற்றினரே அன்றி, காவல்துறையின் ரோந்துப் பணியோ பாதுகாப்போ அங்கு துளியும் இல்லை. ஏற்கனவே இத்தகைய கொடூரச் சம்பவம் நிகழ்ந்திருக்கும் போது, அதே பகுதியில் மீண்டும் ஒரு குழந்தையைக் கடத்த முயற்சி நடப்பது தமிழகக் காவல்துறைக்கே விடப்பட்ட சவாலாகும்! ஒரு குழந்தையைக் காணாமல் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தாமல் அலட்சியமாக இருந்தது தவெக அரசின் மன்னிக்க முடியாத பெருந்தவறாகும்.
எனவே, சிறுமி ஹேமலதாவை உடனடியாகக் கண்டுபிடிக்க, சிபிசிஐடி கண்காணிப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூடுதல் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட வேண்டும். மேலும், செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப்புற, குடியிருப்புப் பகுதிகளில் 24 மணி நேரக் காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், முக்கியச் சந்திப்புகளில் உடனடியாக சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




