தமிழர்களின் முக்கியத் திருவிழாவான தைப் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் பணிபுரியும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய வீர விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கம். இவற்றைக் காண்பதற்காகவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவை பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே மேற்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு நவம்பர் 13-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு நவம்பர் 14-ம் தேதியும் தொடங்குகின்றன.
இதேபோல், போகிப் பண்டிகையான ஜனவரி 14-ம் தேதி பயணம் செய்வதற்கு நவம்பர் 15-ம் தேதியும், தைப்பொங்கல் நாளான ஜனவரி 15-ம் தேதி பயணம் செய்வதற்கு நவம்பர் 16-ம் தேதியும் முன்பதிவு நடைபெறுகிறது.
பண்டிகை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்புவதற்காக ஜனவரி 17-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 18-ம் தேதியும், ஜனவரி 18-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 19-ம் தேதியும், ஜனவரி 19-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 20-ம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைக் காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கான முன்பதிவு நடைபெற்றபோது இணையதள சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே, பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவின்போது இணையதளத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாத வகையில் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




