கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முறையற்ற வகையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என ஏற்கனவே மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள் : நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் – மத்திய இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்
இந்த மருத்துவமனையில், சிகிச்சை பெறும் நோயளிகளுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசி போன்ற மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், உள்நோயாளிகள் வார்டு பகுதியிலும், மருத்துவமனை வளாகத்திலும் ஆங்காங்கே வீசப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை கிடங்கு போல் காட்சியளிப்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது.
ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இந்த மருத்துவமனையில், ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதியுறும் மக்கள், கூடுதல் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்குள் மருத்துவ உயரதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேந்தன்.







