மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவர் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 18 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. புவனேஸ்வரி மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் புவனேஸ்வரியின் செல்போன் சில நாட்களாக சுவிட்ச்டு ஆப் – ஆக இருந்ததால், அவர் பெற்றோர், ஸ்ரீகாந்த் ரெட்டிக்கு போன் செய்து கேட்டனர்.
அப்போது அவர், புவனேஸ்வரி கொரோனாவால் உயிரிழந்து விட்டதாகவும் உடலை தனக்கு கூட காண்பிக்க வில்லை என்றும் சோகமான குரலில் கூறியிருக்கிறார். இதை அவருடைய உறவினர்களிடமும் கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த அவர் உறவினர்கள், போலீசில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த 23 ஆம் தேதி, திருப்பதி அரசு மருத்துவமனை அருகே, சூட்கேஸில் எரிந்த நிலையில், பெண்ணுடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதைக் கைப்பற்றி விசாரித்தனர். அந்த பெண்ணுக்கு 25 ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகளை, போலீசார் சோதனையிட்டபோது, ஒருவர் கையில் குழந்தையுடன் காரில் இருந்து இறங்கி, திருப்பதி அரசு மருத்துவமனை அருகே, சூட்கேஸ் ஒன்றை வீசி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
அது ஸ்ரீகாந்த் ரெட்டி என்பதும் முகம் சிதைந்து சடலமாகி இருந்தவர், புவனேஸ்வரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டர். இந்நிலையில் அவரை தேடிவந்த போலீசார் நேற்று கைது செய்தனர்.
மனைவிக்கும் தனக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கோபத்தில், குழந்தையின் கண்முன்னே மனைவியை கொன்றதாகவும் பின்னர் உடலை எரித்து, சூட்கேஸில் கொண்டு சென்று மருத்துவமனை அருகே வைத்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







