முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

பிரேசிலுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் பிரேசிலுடன் அந்த நிறுவனம் மேற்கொண்ட 324 மில்லியன் டாலர் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அரசு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது.

20 மில்லியன் கோவேக்சின் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிரேசில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் அதிக பட்ச விலையில் கொள்முதல் செய்யப்பட்டது, விரைவான பேச்சுவார்த்தைகள், வழிகாட்டும் நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அனுமதி பெறப்பட்டது ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஐதராபாத்தின் பாரத் பயோடெக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“கோவேக்சின் கொள்முதல் ஒப்பந்தம் குறிந்து பிரேசில் அரசின் சுகாதார அமைச்சகத்துடன் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெற்ற சந்திப்புகளில் படிப்படியான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. சந்திப்புகளின் தொடர்ச்சியாக ஒப்பந்தங்கள், முறையான அனுமதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி ஜூன் 4ம் தேதி பெறப்பட்டது. ஜூன் 29ம் தேதி வரை பாரத் பயோடெக் நிறுவனம் எந்த முன்பணமும் பெறவில்லை. பிரேசிலுக்காக எந்த ஒரு தடுப்பூசியும் அனுப்பவில்லை. இதே போன்ற அணுகு முறையைத்தான் பல நாடுகளிலும் பாரத் பயோடெக் மேற்கொண்டது. அங்கெல்லாம் கோவேக்சின் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளி வந்துள்ள செய்திகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதன் அடிப்படையில் வந்துள்ளன. தடுப்பூசி தொழிலில் உருவாக்கப்பட்ட, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான நடைமுறையைப் பின்பற்றியே கோவேக்சின் கொள்முதல் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன .

பாரத் பயோடெக் நிறுவனமானது இந்தியாவை தவிர வெளி நாடுகளுக்கு தலா ஒரு தடுப்பூசி 15-20 டாலர் வீதம் வழங்கப்படுகிறது. இதைப் பின்பற்றியே பிரேசிலுக்கு தலா ஒரு தடுப்பூசி 15 டாலர் வீதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனமானது வழிகாட்டும் விதிமுறைகளுக்கு இணக்கம் தெரிவித்தல், விநியோகித்தல், காப்பீடு , மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்வதற்கு ப்ரீசிகா மெடிகாமென்டோஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனமும் பல வெளிநாடுகளுடன் மருந்து ஏற்றுமதியில் அனுபவம் பெற்ற நிறுவனமாகும்.” இவ்வாறு பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது


Advertisement:
SHARE

Related posts

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

Ezhilarasan

பாகிஸ்தானில் லேண்ட் க்ரூஸர் கார் ஓட்டும் 5 வயது சிறுவன்; வைரல் வீடியோ

Jeba Arul Robinson

இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி!

Halley karthi