பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டு மது அருந்திவிட்டு சிறுவர்களை அடித்து உதைத்து வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள கல்லாறு பகுதிக்கு அருகாமையில் உள்ள ஊர்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் குளிப்பதற்காக வருவது வழக்கம். இந்த நிலையில், கல்லாறு பகுதிக்கு குளிக்க சென்ற இரு பிரிவை சேர்ந்த சிறுவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு தரப்பை சேர்ந்த சிறுவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த சிறுவர்களை குளிக்க விடாமல் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்பொழுது, அந்த ஆற்றுப்பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த கடையநல்லூர் பகுதியை சேர்ந்த புதிய செல்வம் என்ற நபர் அந்த சிறுவர்களில் சிலரை பிடித்து அடித்து உதைத்து அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் கஞ்சா போதையில் இருந்ததால்தான் சண்டை இட்டதாகவும் கூறச் சொல்லி வீடியோவை பதிவிட்டு அதை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அது குறித்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின் போது புதிய செல்வம் என்ற நபர் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் அந்த சிறுவர்களை மிரட்டி அடித்து உதைத்து வீடியோ பதிவிட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த நபர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.