மதுரை சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சம் மக்கள் வர வாய்ப்புள்ளதால் தொற்று நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய ஏற்பாடுகளை கண்காணிக்கவும், சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், மதுரை சென்றுள்ள மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பத்து பேசிய அவர், “சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சம் மக்கள் வர வாய்ப்புள்ளது. அதனால் திருவிழாவில் தொற்று நோய் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 3,500 சுகாதாரப் பணியாளர்கள் திருவிழாவில் சுகாதாரப் பணியில் ஈடுபட உள்ளனர். திருவிழா நடைபெரும் இடங்களில் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதி, மடங்களில் சுகாதாரத்துறை ஆய்வாளர்களை கொண்டு ஆய்வு நடத்தப்படும். மக்களுக்காக 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். 32 இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட உள்ளது. கள்ளழகருடன் ஒரு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமான குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படும். அன்னதான உணவுகள், குளிர்பானங்கள் சுகாதாரமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் இல்லை. தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 எனும் அளவிலான பாதிப்பு மட்டுமே வருகிறது. விரைவில் கொரோனா முழுமையாக இல்லாத நிலை வரும். அதிமுக ஆட்சி காலத்தில் போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்படவில்லை. தற்போது முதல்வர் உத்தரவுப்படி போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். 2 மாதங்களில் 200 போலி மருத்துவர்களில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை முறையாக அழிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டள்ளது என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








