முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவருக்கு ஜெயலலிதாவின் அரசியல் பயணம், மக்களுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை. இன்றைக்கும் தமிழ்நாடு மக்கள் குறிப்பாக பெண்கள் ஜெயலலிதாவை தங்களது முன் மாதிரியாக வைத்து வாழ்வில் ஒவ்வொரு படிகளையும் கடந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் ஜெயலலிதாவை ஆறு முறை முதல்வராக்கினார்கள். ஜெயலலிதாவிற்கு மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. இதைப்பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை.
https://twitter.com/AmmavinVazhi/status/1668586961672736768
இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்கள், தமிழ்நாட்டில் பாஜக இயக்கத்திற்கே கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. இது போன்ற கருத்துக்களால் திமுகவினர் வேண்டுமென்றால் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மக்கள் யாரும் அண்ணாமலையின் பேச்சை ரசிக்கவில்லை. எனவே, பொறுப்பற்றவர்கள் பேசும் இது போன்ற பயனற்ற பேச்சுக்களை புறந்தள்ளிவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.







