அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு தேசிய அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி “அமலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என தெரிவித்திருந்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி :
திமுக மீதான பாஜகவின் அரசியல் பழிவாங்கலை வன்மையாக கண்டிக்கிறேன்; விசாரணை அமைப்புகளின் துஷ்பிரயோகம் தொடர்கிறது. தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் :
எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறையின் ரெய்டுகளுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சீரமைக்க முடியாத சேதத்தை நமது ஜனநாயகத்திற்கு பாஜக ஏற்படுத்துகிறது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் :
எதிர்க்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் சோதனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான குரலை நசுக்கும் மோசமான நோக்கத்துடன் செயல்படும் அமலாக்கத்துறை தற்போது தென் மாநிலங்களுக்கு சென்றுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி :
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் அவரது அறையில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறையின் சோதனையை வன்மையாக கண்டிக்கிறேன். மோடி அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்குவதற்கு அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துக்கிறது.