” எதிர்கட்சிகளின் குரலை நசுக்க முடியாது “ – தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனைக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

” எதிர்கட்சிகளின் குரலை நசுக்க முடியாது “ என அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மின்துறை…

” எதிர்கட்சிகளின் குரலை நசுக்க முடியாது “ என அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதே போல சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி “அமலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் .

“ எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதே நரேந்திர மோடி அரசின் தனித்துவம் ஆகும். இதுபோன்று விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்கட்சிகளின் குரலை நசுக்க முடியாது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கான உறுதியை மேலும் வலுப்படுத்தும்.” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.