வ.உ.சி.யின் நினைவைப் போற்றிய தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளையொட்டி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் புகழஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்!

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்காற்றியவர் வ.உ.சிதம்பரனார். 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்த இவர், ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்து ஆதிக்கத்தை எதிர்த்து 1906-ம் ஆண்டு சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். நாட்டின் விடுதலைக்காகத் தனது சொத்துகளையும், வாழ்வையும் அர்ப்பணித்த வ.உ.சிதம்பரனார் 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி மறைந்தார். அவரது 90-வது நினைவு நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டிடிவி தினகரன் புகழஞ்சலி!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகச் சவால்விட்டு, இந்திய மண்ணில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி கப்பலை இயக்கிய விடுதலைப் போராட்ட வீரரும், சிறைத் துயரங்களையும் கொடுமைகளையும் அனுபவித்தபோதும் சுதந்திர வேட்கையைத் துறக்காத தியாகச் செம்மலுமான கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று! தனது சொத்துக்களையும், சுகபோக வாழ்க்கையையும் இழந்து, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்த செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் ஒப்பற்ற வீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் எஎந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சீமான் புகழஞ்சலி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை! தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்! சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈந்து வறுமையில் வாடிய வள்ளல்! தமிழ் இலக்கியங்களைப் பழுதற கற்றுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்! நமது தியாகமிகு பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவுநாளில் பெருமிதத்துடனும் அவர் பெரும் புகழ் போற்றுவோம்!

வழிவழியே வரும் மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம்,நமது பாட்டனார் வ.உ.சி அவர்கள் காட்டிய வழியில் தாய் மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாகத் தொடர்ந்து அயராது பாடுபட உறுதியேற்போம்! கப்பலோட்டிய தமிழர் நமது பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு புகழ் வணக்கம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை புகழஞ்சலி!

வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனத்தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி அத்தியாயம் படைத்த கப்பலோட்டிய தமிழன், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுதேசி இயக்கத்தின் அடையாளமாகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தொழில் வலிமையையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்தவர். தியாகத்தையும், துணிச்சலையும், தேசப்பற்றையும் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தவர். அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், நாட்டின் விடுதலைக்காகத் தனது உடைமைகளையும், வாழ்வையும் அர்ப்பணித்த ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.