வ.உ.சி.க்கு முதல்வர் விஜய் வீரவணக்கம்!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகம், நாட்டுப்பற்று, துணிச்சல் மற்றும் தன்மானத்தைப் போற்றித் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்!

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்து ஆதிக்கத்தை எதிர்த்து, 1906-ம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி இந்தியர்களின் கப்பல் போக்குவரத்துக்கு வித்திட்டார். இதனால் இவர் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று போற்றப்படுகிறார். நாட்டின் விடுதலைக்காகத் தனது சொத்துகளை இழந்து, ஆங்கிலேயர்களின் சிறைக் கொடுமைகளையும் எதிர்கொண்டவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். தமிழ் மொழி, சுதேசி சிந்தனை, சுயசார்பு மற்றும் நாட்டுப்பற்றின் அடையாளமாக இன்றளவும் போற்றப்படுகிறார்.

வ.உ.சி.க்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி!

வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!

தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.

சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.