வ.உ.சி.க்கு தமிழக பாஜக தலைவர்கள் புகழஞ்சலி!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் புகழஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பொருளாதார ரீதியாகவும் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள முடியும் என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்தவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்து ஏகபோக ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தைத் தொடங்கினார். தூத்துக்குடி – கொழும்பு இடையே சுதேசிக் கப்பல்களை இயக்கி இந்தியர்களின் வணிக உரிமைக்காகப் போராடினார். இதனால் ஆங்கிலேயர்களின் கடும் எதிர்ப்புக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளானார். தொழிலாளர் நலனுக்காகப் போராடியதுடன், சிறையில் செக்கிழுக்கும் கொடுமையையும் அனுபவித்தார். தமிழ் இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த வ.உ.சிதம்பரனார், 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி மறைந்தார். அவரது 90-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி!

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்து, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த கப்பலோட்டிய தமிழன், தியாகச் செம்மல் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று! சுதேசி இயக்கத்தின் மூலம் இந்தியர்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டி, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி இந்தியர்களின் வணிக உரிமைக்காகப் போராடிய அவரது துணிச்சலும் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் என்றும் போற்றத்தக்கவை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எதிர்கொண்டும் தளராத தேசப்பற்றுடன் வாழ்ந்த அவரது தியாக வரலாறு, தலைமுறைகள் பல கடந்து அவரது புகழும் பெருமையும் என்றும் நிலைத்திருக்கும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் புகழஞ்சலி!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தில் அவரது தியாகச் செயற்பாட்டையும்,
தேசபக்தியையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வானதி ஸ்ரீநிவாசன் புகழஞ்சலி!

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீநிவாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த தியாகச் செம்மல்!
நாட்டு மக்களிடம் சுதேசி உணர்வைத் தூண்டி, தனது சொத்துக்களையும், வாழ்வையும் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்து, ஆங்கிலேயர்களால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் செக்கிழுத்து சொல்லொணாத் துயரங்களைச் சுமந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று. அவரது தியாகத்தையும், வீரத்தையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.