மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் மிக முக்கியமானதாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்வதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழியில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ளவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆவணங்களை சரிபார்த்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படியுங்கள் : பணிந்தது ஆர்சிபி…! – 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மகளிர் குழுக்கள், மீனவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில், தலைமை செயலாளர் இறையன்பு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் பங்கேற்றனர். தொடர்ந்து மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்கு தான் மிக முக்கியமானது என தெரிவித்தார். சில சமயங்களில் சில பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரிய பிரச்னையாக மாறிவிடுவதாக கூறிய முதலமைச்சர், காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். காவல்நிலைய மரணங்கள் இல்லாத நிலை தொடர வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.








