ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ 

புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் தொடர்பாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று சிறப்பு கவன…

புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.

புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் தொடர்பாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

தீர்மானத்தின் மீது பேசிய பரந்தாமன், குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார்  எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன் எனவும், தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி என்று குற்றம்சாட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ பரந்தாமன், குடிசை மாற்று வாரிய அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் அவையில் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  “புகார் எழுந்த நிலையில் நானும் அமைச்சர் சேகர்பாபுவும் நேரில் சென்று அந்த குடியிருப்புகளை ஆய்வு செய்தோம்.  குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஐஐடி குழு அளிக்கும் அறிக்கையின் படி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.