அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா? சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான் வெளியேறியதாகவும், தாங்கள் வெளியேற்றவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதம்…

சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான் வெளியேறியதாகவும், தாங்கள் வெளியேற்றவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று நடைபெற்றது. நேற்றைய அவை நிகழ்வை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், இன்றும் அவை நிகழ்வில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டமன்ற செயல்பாடுகள் தொடங்கியதும் பேசிய முன்னவர் துரைமுருகன், “நேற்று இந்த அவையில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. சில பத்திரிகைகளில் கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் எனவும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் எனவும் செய்தி வந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

அதிமுகவினர் தாங்களாக அவையில் இருந்து வெளியேறிய செய்தியை வெளியேற்றப்பட்டது போல வெளியிட்டுள்ளனர் என்றும், இத்தகைய செய்திகளை வெளியிடும் போது பத்திரிகைகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் முதலமைச்சர். மக்களுக்கான பிரச்னைகளை பேச வேண்டிய அவையில், தனிப்பட்ட பிரச்னையை எழுப்பக் கூடாது. இருப்பினும் நான் அனுமதித்தேன், ஆனால் என் அனுமதி பெறாமல் அதிமுக உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி கூச்சலிட்டனர்” என்று கூறினார். அதிமுகவினர் தான் வெளியேறினார்கள் நான் வெளியேற்றவில்லை, இனி வரும் காலங்களில் ஊடகங்கள் பத்திரிகைகள் செய்திகளை கவனமாக கையாள வேண்டும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.